கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை; முதல் அமைச்சர் பழனிசாமி
கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் இன்று திண்டுக்கல் மாவட்டம் சென்றார். அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 3,530 பேருக்கு 2 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, 8 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டிடங்கள், தடுப்பணைகள், மருந்தகங்கள், மாணவர் விடுதிகளை திறந்து வைத்தார். மேலும், நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளி கட்டிடங்கள் ஊராட்சி அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அவர் இன்று பேசும்பொழுது, தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு சலுகை வழங்கப்படும். இதேபோன்று தொழில் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கூடுதலாக இ-பாஸ் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மதுரையில் திருமங்கலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கனவு நனவாகி வருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளன. எதிர்காலத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கும் என கூறினார்.
கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இதுபற்றிய எதிர்க்கட்சிகள் புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. மாவட்ட வாரியாக விவரங்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறோம் என்றும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறினார்.