தமிழகத்தில் இதுவரை 1,382 பேர் உடல் உறுப்பு தானம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் இதுவரை 1,382 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-13 23:11 GMT
சென்னை, 

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை ஏற்று, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் ஆண்டு அறிக்கையினை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் முதன் முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 முறையாக தமிழகம் முதலிடம் வகித்து மத்திய அரசின்விருதுகளை பெற்றுள்ளது.

ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காலத்திலும் நெறிமுறைகளை உருவாக்கி தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழகம் சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் காந்திமதி, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்