செயல்படாத செட்டாப் பாக்ஸ்களை திருப்பி வழங்க வேண்டும்: அரசு கேபிள் டி.வி. நிறுவனம் எச்சரிக்கை

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செயல்படாத செட்டாப் பாக்ஸ்களை திருப்பி வழங்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.

Update: 2020-08-16 22:34 GMT
சென்னை, 

கால்நடைத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் டி.வி. சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக மொத்தம் 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உள்ளது. தற்போது சந்தாதாரர்களுக்கு எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் உள்ளதாக தெரிகிறது. எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இந்த செட்டாப் பாக்ஸ்களை உடனே செயலாக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

செயலாக்கம் செய்ய இயலவில்லை என்றால், செயலாக்கம் செய்யப்படாத செட்டாப் பாக்ஸ்களை இந்நிறுவனத்திற்கு உடனே திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. செட்டாப் பாக்ஸ்களை இந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு, செயலாக்கம் செய்யாமல் வைத்து இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும்.

எனவே, செயல்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை உடனே செயலாக்கம் செய்ய வேண்டும் அல்லது இந்நிறுவனத்திடம் திருப்பி வழங்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொதுமக்களும் இந்நிறுவனத்தின் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் உடனே திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்