ரவுடி வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் பலி; நடந்தது என்ன?- பரபரப்பு தகவல்கள்

ரவுடி வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் பலி; நடந்தது என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2020-08-18 12:45 GMT
தூத்துக்குடி

ரவுடி துரைமுத்து என்பவர் மீது ஏரல், பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டத்தில் சாதி ரீதியாக நடந்த இரட்டைக் கொலையில் அவர் தேடப்பட்டு வந்தார்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு நாடு அருகே மனக்கரை பகுதியில் வல்லநாடு மலைப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு போலீஸ் சிறப்பு படைசென்றது.

அப்போது ரவுடி கும்பல் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில் ரவுடி துரைமுத்து என்பவர் வீசிய நாட்டுவெடிகுண்டு, காவலர் சுப்ரமணியன் மீது விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சில காவலர்கள் காயமடைந்தனர். காவலர் சுப்பிரமணி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய துரைமுத்துவை போலீசார் என்கவுன்டர் செய்ததாக சொல்லப்படுகிறது. காவலர் சுப்ரமணியம் ரவுடி துரைமுத்துவின் சடலங்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு வீசியதில் கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியம் ஏரல் தாலுகாவுக்குட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் 6 மாத குழந்தையும் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில் பணியை தொடங்கிய அவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தனிப்படை பிரிவு காவலராக மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு எஸ்.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார் அவர்கூறியதாவது:-

துரைமுத்து என்ற ரவுடியை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான சிறப்புப் படை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கெனவே 2 கொலைகள் செய்து தலைமறைவாக இருந்த ரவுடி துரைமுத்து முறப்பநாடு அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக சிறப்புப் படைக்கு தகவல் வந்துள்ளது. மேலும் ஒரு கொலைக்கு அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், 5 பேர் கொண்ட காவலர் குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளது. போலீஸார் நடமாட்டத்தை அறிந்து கொண்ட அந்த ரவுடி தப்பியோட முயன்றுள்ளார். ரவுடி துரை முத்து முதலில் ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசியுள்ளார். இரண்டாவதாக வீசிய நாட்டு வெடிகுண்டு காவலர் சுப்ரமணியன் தலையில் விழுந்துள்ளது. இதில் காவலர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரவுடி துரைமுத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என கூறினார்

ஆனால், எஸ்.பி. பேட்டியளித்த சில நிமிடங்களிலேயே பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ரவுடி துரைமுத்துவும் இறந்தார்.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்