பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிப்பு; சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நேற்று தளர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் சினிமா தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2020-08-31 00:00 GMT
சென்னை,

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்பித்தலை தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங் காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக் கான தடை நீடிக்கும்.

* புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றைகட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்