கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மீறல்: சென்னையில் ரூ.1¾ கோடி அபராதம் வசூல்

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதற்காக சென்னையில் ரூ.1¾ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-12 23:47 GMT
சென்னை,

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நடந்தது.

இதில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குனர் எஸ்.பழனிச்சாமி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி தொடர்ந்து மேற்கொள்ளவும், பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால்கள், ஏரி, குளம் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி மழைநீர் வீணாகாமல் சேகரிக்கும் வகையில் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பை கேட்டறிந்த அவர் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் 700 எம்.எல்.டி. குடிநீரை தொடர்ந்து வழங்கிடவும் உத்தரவிட்டார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொது சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த மருந்தும் இல்லாத நிலையில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அவ்வப்போது சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவற்றின் மூலமே இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும். எனவே, பொதுமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வுகளை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும்.

தற்போது, அரசின் சார்பில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இதுவரை ரூ.1 கோடியே 89 லட்சத்து 25 ஆயிரத்து 662 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் நோக்கம் பொதுமக்களிடமிருந்து அபராதம் வசூலிப்பது அல்ல. எனவே, பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்