விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்தாக வேண்டும் - கி.வீரமணி அறிக்கை

விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்தாக வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-09-21 07:27 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள, அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்த கதை என்பது போல, மக்களவையில் நிறைவேற்றியுள்ள விவசாயம் சார்ந்த 3 முக்கிய மசோதாக்களும் நாட்டின் விவசாயிகளால் பெரிதும் எதிர்க்கப்பட்டு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில் இறங்கி, வீதிகளுக்கு வந்தும் போராடுகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களது வருமானத்தை இரு மடங்காக பெருக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த பா.ஜ.க. அரசு, இன்று அவர்களது குறைந்தபட்ச உரிமைகளைக்கூடப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளிடம் அவைகளைத் தள்ளிவிடும் கொடுமையான நிலைக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதே இந்த 3 மசோதாக்களின் உள்ளடக்கமாகும். 

இதை எல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தலைமையில் உள்ள மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி 21-ந் தேதி (இன்று) கூடி முடிவுகளை மேற்கொள்வது காலத்திற்கேற்ற கடமை முடிவும், வரவேற்கத்தக்கதும் ஆகும். விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்