எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-15 23:15 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உங்களுடைய தாயார் தவுசாயம்மாள் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். இந்த துக்கமான தருணத்தில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தவுசாயம்மாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் பலம் மற்றும் உத்வேகத்தின் முடிவில்லாத ஆதாரமாக திகழ்ந்தார். அவருடைய எளிமை, அரவணைப்பு, தன்னலமற்ற பண்புகள் இதற்கு எப்போதும் ஆதாரமாக இருக்கின்றன. 

பிராந்தியங்கள் மற்றும் மொழிகளில் உள்ள இந்திய கலாசாரங்கள் தாயை, கடவுளுக்கு முந்தைய ஸ்தானத்தில் வைத்துள்ளன. தவுசாயம்மாள் போன்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கருணை மற்றும் அர்ப்பணிப்பு மதிப்புகளுடன் வளர்த்திருப்பது இந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. இப்போது வரையிலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் அவருடைய பாசம் மற்றும் கவனிப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. அவருடைய மறைவின் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடல்ரீதியாக உங்களுடைய தாயார் இன்று உங்களுடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச்சென்ற நினைவுகள் மற்றும் அவர் உங்களிடமும், உங்கள் குடும்பத்தினரிடமும் ஏற்படுத்திய மதிப்புகள் மூலம் தொடர்ந்து வாழ்வார். இந்த துயரமான தருணத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கிக்கொள்ள உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இறைவன் வலிமையை கொடுக்கட்டும். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்