செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-25 19:39 GMT
சென்னை,

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியை கொண்டது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியவுடன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நீர் மட்டம் 21 அடியைத் தொட்டது. இந்த நிலையில் ‘நிவர்’ புயலின் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது. கன மழை பெய்தாலும் நீர் மட்டம் 22 அடியை தொட்டால் மட்டுமே உபரி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறி வந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொடும் அளவிற்கு வேகமாக சென்றது. மேலும் ஏரியில் மொத்த கொள்ளளவு 3 மில்லியன் கன அடியை தாண்டியது. ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்வதாலும், வினாடிக்கு ஏரிக்கு 4,026 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததாலும், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இதன் காரணமாக வெள்ளபாதிப்பு அபாயம் உள்ள பகுதி மக்களுக்கு தகவல் அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பதற்காக மதகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏரிக்கு வரும் அனைத்து நுழைவு வாயில் கதவுகளும் மூடப்பட்டு, ஏரி முழுவதும் போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

ஏரியை திறப்பதற்கு முன்பு, பொதுமக்கள் தங்களை பாதுகாப்பான இடங்களில் செல்வதற்காக மதகின் மேல் அமைக்கப்பட்டிருந்த அறிவிப்பு அலாரம் ஒலிக்கப்பட்டது. இந்த அலார சத்தம் சுமார் 7 கிலோ மீட்டர் வரை கேட்கும். அதனைத்தொடர்ந்து நேற்று காலை 12 மணிக்கு ஏரியில் 7 முதல் 13 வரையிலான 7 மதகுகளின் வழியாக முதற்கட்டமாக 1000 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 மதகுகளின் வழியாக 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு 9 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

மதகுகளை திறந்தவுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீர் மதகுகளை தாண்டி வெள்ளம் போல் சீறிப் பாய்ந்தது. ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதை அங்கிருந்த பொதுமக்கள் அங்கு கூடி ஆரவாரத்துடன் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்து கண்டுகளித்தனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மழை குறையத்தொடங்கியது. இதையடுத்து ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்