திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Update: 2020-11-28 23:05 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலாவும், இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உலாவும் நடந்தது. இதை காண திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர விழாவான மகா தீப தரிசனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 

மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.15 மணியளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் தீபத்திற்கு தேவையான நெய், காடா துணிகளும் கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியூர் பக்தர்கள் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்