தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Update: 2020-12-02 13:10 GMT
சென்னை,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் சுரேந்திரன் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்கார‌ராக களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் நடராஜன் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். இது நடராஜனின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும். அதனை தொடர்ந்து 48-வது ஓவரில் ஆஸ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்