அதிமுக - பாமக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை : அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் பாமக நிறுவனர் ராமதாசுடன் விரைவில் சந்திப்பு

அதிமுக - பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-12-22 15:35 GMT
சென்னை

தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற  உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள்  தயாராகி வருகின்றன.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தனது பிரச்சாரப் பயணத்தை நடத்தி வருகிறார்.  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரத்தை தொடங்கி பொங்கல் தொகுப்பாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.  திமுக மிக விரைவில் தனது பிரமாண்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

கூட்டணியை பொறுத்தவரை திமுக கூட்டணி ரெடியாக உள்ளது. எத்தனை தொகுதிகள் யார் யாருக்கு என்பதில் மட்டுமே திமுக கூட்டணியில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. 

நாடாளுமன்ற தேர்தலில்  அதிமுகவுடன்  இருந்த பாமக  உள்ளிட்ட  கூட்டணி கட்சிகள்  தாமரை இலை தண்ணீராக நடந்து வருகின்றன.  அவ்வப்போது அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் அறிவித்து கொள்கின்றன.

இந்த நிலையில்  அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக - பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்  என தகவல் வெளியாகி உள்ளது. 

பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்-எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடக்கும்  எனவும்  வரும் 27ம் தேதி அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாமகவுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்