ஒரே விமானம், ஒரே கார், ஒரே ஜீப்பில் பயணித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் -தொண்டர்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் இருந்து சேரன்மாதேவி கோவிந்தபேரிக்கு ஒரே காரில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பயணம் செய்தனர். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Update: 2021-01-04 14:10 GMT
தூத்துக்குடி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கோவிந்தபேரியில் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று  மாலை நடந்தது.

ஒரே காரில் பயணம் 

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் தூத்துக்குடிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே விமானத்தில் வந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர்கள் ஒரே காரில் கோவிந்தபேரிக்கு புறப்பட்டனர். அதாவது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏறிச்சென்றார். இதை பார்த்த அங்கு இருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்தனர்.

தொண்டர்கள் உற்சாகம் 

தொடர்ந்து நெல்லை மாவட்ட எல்லையான மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் வந்த போது அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காரில் இருந்து இறங்கி திறந்த ஜீப்பில் ஏறினார்கள். இருபுறமும் கூடி இருந்த பொதுமக்கள், தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இரட்டை விரலை காண்பித்து உற்சாகப்படுத்தினர். பின்னர் அவர்கள் காரில் கோவிந்தபேரிக்கு புறப்பட்டு சென்றனர்.

இருதலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனித்தனியாகவே பங்கேற்று வந்தனர். இதனால் தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அதனை தவிடுபொடியாக்கும் வகையில் இருதலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒரே விமானம், ஒரே கார், ஒரே ஜீப்பில் பயணித்த சம்பவம் தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறு விபத்து

முன்னதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பயணித்த காருக்கு பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனம் வல்லநாடு பஜார் பகுதியை கடந்து 50 மீட்டர் சென்ற நிலையில் பாதுகாப்பு வாகனத்தை தொடர்ந்து சென்று கொண்டிருந்த அதிமுகவினரின் வாகனத்துக்கு குறுக்கே கன்றுக்குட்டி ஒன்று திடீரென வந்துவிட்டது.

கன்றுக்குட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரில் சென்ற கட்சியினர் திடீரென பிரேக் பிடித்ததில் அந்த வாகனத்துக்கு பின்னால் வந்த கார், முன்னிருந்த கார் மீது அடுதடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்சியினர் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

உடனடியாக அவர்கள் அனைவரும் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு, அதை பின்தொடர்ந்து வந்த மற்ற வாகனங்களில் ஏறி நெல்லை புறப்பட்டுச் சென்றனர். இந்த விபத்தால் வல்லநாடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்