அதிமுக கோட்டை தகர்கிறதா? - கமல்ஹாசன் டுவீட்

கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்கிறதா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2021-01-10 15:12 GMT
கோவை,

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ந் தேதி மதுரையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுவரை 4-கட்டமாக பிரசாரம் நடத்தி முடித்துள்ள கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் மசக்காளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: 

நமது வெற்றிக்கு ஆதரவாக செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இது சினிமாக்காரனைப் பார்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை தேர்தலில் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

மக்கள் நலன், எதிர்காலத்தில் அக்கறை கொண்டு பல அரிய திட்டங்களை வகுத்துள்ளோம். எங்களது திட்டத்தை ஆசியாவில் வேறு எந்தக் கட்சியும் செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறியபோது அதை பலர் கிண்டல் செய்தனர்.

ஆனால், குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பல கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கு ஊதியம் என்பது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ளது என்றார்.

இந்நிலையில் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?

காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே... என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்