தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளில் சபதம் ஏற்போம் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-01-17 00:00 GMT
கோப்புப்படம்
சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, உலகில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் மகத்தான திருவிழா. ‘தன்னை தலையாகச் செய்வானும் தான்’ என்று சங்கத் தமிழ் கூறும் வாழ்க்கை நெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர். வறுமையின் கோரப்பிடியில் வாடிய இளமைக் காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு, நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த எம்.ஜி.ஆர். உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் மனிதர்களில் மாணிக்கம் என்ற இரவாப் புகழ்பெற்ற சரித்திர நாயகர்.

அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் அன்பு சிம்மாசனம் போட்டு மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா.

அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இன்றும், இனிவரும் காலங்களிலும் அ.தி.மு.க. ஆட்சி வெற்றிநடைபோடும் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். நமது இயக்கம் சமூக மாற்றத்திற்கான இயக்கம்.

இதோ இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் என்னும் ஜனநாயக போர்க்களத்தை நாம் சந்திக்கப்போகிறோம். 2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போவது, மக்களாட்சியின் மாண்புகளைப் போற்றி, எல்லோரும் பங்குபெறும் உண்மை ஜனநாயகமா? அல்லது ஒரு குடும்பத்தின் பதவி வெறிக்கு மக்களை பலியிடும் போலி ஜனநாயகமா? என்ற வினாவுக்கு விடைகாணப்போகும் களமாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் களம் அமையப்போகிறது.

தி.மு.க. நடத்த துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலைதூக்க முடியாத வண்ணம் தேர்தல் களத்தில் நாம் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டிய நேரமிது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நடத்திய, இன்று நாமும் நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளில், வெற்றிநடைபோடும் தமிழகத்தை காத்திட, நாம் அனைவரும் சபதம் ஏற்போம், கடுமையாக களப்பணி ஆற்றுவோம், வெற்றி காண்போம். வெற்றி நமது சொந்தம், வீரம் நமது சொத்து. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். வெற்றி நமதே.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.










மேலும் செய்திகள்