தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும்; மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-02-21 22:05 GMT
ஈரோடு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
டெல்லி விவசாயிகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புதுடெல்லியில் 88 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதை திசைத்திருப்ப தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வரப்புயர நீர் உயரும் என்று அவ்வையின் பாடலை பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை திசை திருப்ப பார்க்கிறார். 
அ.தி.மு.க. ஆட்சி மாறப்போகிறது என்று தமிழகம் முழுவதும் நாம் காணும் காட்சிகள் சாட்சியாக இருந்தாலும், இன்று இங்கு நான் காணும் காட்சிதான் அந்த காட்சிகளை எல்லாம் உறுதி செய்வதாக உள்ளது. இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை பாதுகாப்பதை உறுதி செய்கிறேன்.
கடன் ரத்து
 தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. விவசாயிகள் நில உரிமை பாதுகாக்கப்படும். கலைஞர் 5 முறை ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அதிகமாக யாரும் கேட்காமலேயே அதிக திட்டங்கள் நிறைவேற்றி துறை என்றால் அது விவசாய துறைதான். 1970-1971-ம் ஆண்டு குடியிருப்போர் மனை உரிமை சட்டத்தை நிறைவேற்றியது கலைஞர் ஆட்சிதான். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது மின்சாரத்துக்கு ஒரு ரூபாய் குறைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், 1989-1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோதுதான் சட்டமன்றத்தில், விவசாயிகள் ஒரு ரூபாய் மின்சாரத்துக்கு குறைக்கக்கோரி போராட்டம் செய்தீர்கள். ஆனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட மின்சாரத்துக்கு தர வேண்டாம். விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தருகிறேன் என்றவர் கலைஞர். 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில்  பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அறிவித்தபடி, பதவி ஏற்ற அந்த மேடையிலேயே ரூ.7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்து கையொப்பமிட்டார். 
 ரத்து செய்யப்படும்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று உறுதியாக கூறுகிறேன். இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் திரும்பப்பெறப்படும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை வழங்கப்படும். இலவச மின்சாரம் தி.மு.க. கொடுத்தது. அது அப்படியே தொடரும். விவசாயிகள் தொடர்பான அனைத்து திட்டங்களும் அதிகாரிகள் மட்டுமின்றி, விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் மூலம் ஆலோசனை செய்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். தி.மு.க. வெற்றி பெற்று அமையும் அரசு விவசாயிகளின் அரசாக, மண்ணுக்கான அரசாக, மக்களின் அரசாக அமையும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்