தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு: “தமிழை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை” - ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அரசு வழங்கும் இட ஒதுக்கீடு என்பது தமிழை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2021-02-24 01:10 GMT

மதுரை,

திருச்சியை சேர்ந்த சன்மதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டதிருத்தத்தை ரத்து செய்து விட்டு, நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை மட்டும் தமிழ் வழியில் படித்து இருந்தால் போதுமானது என முன்பு இருந்ததையே கடைபிடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மனுதாரர் கோரிக்கையை ஏற்க இயலாது. இந்த விஷயத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போது தான் ஏழை மாணவர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள் பயன்பெறுவார்கள். மனுதாரர் கல்லூரி படிப்பை தமிழ் வழியில் படிப்பது இட ஒதுக்கீட்டிற்காக மட்டுமே. இவரை போன்றவர்களுக்கு எப்படி இட ஒதுக்கீடு வழங்க முடியும்? அரசு பள்ளிகளில் தமிழ் வழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு என்பது தமிழ் வழியில் பள்ளியில் இருந்து படிப்போருக்கு மட்டும் தான். இந்த சட்டத்தில் எந்த விதிமீறலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்