தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Update: 2021-02-27 16:53 GMT
சென்னை,

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி உள்ளிட்ட அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.  இதன்படி, தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெறும்.  ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமுடன் செயல்படுத்த தொடங்கி உள்ளன.

தேர்தலை முன்னிட்டு சென்னையில் தேர்தல் கண்காணிப்பு குழு செயல்பாட்டை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசும்பொழுது, பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான புகார்களை நாளை முதல் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டார். பொதுக்கூட்டங்களில் அரசியல் கட்சிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்