வருமானவரி சோதனை: மதுரை, ராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.175 கோடி கண்டுபிடிப்பு 3 கோடி ரொக்கம் பறிமுதல்

மதுரை, ராமநாதபுரத்தில் நடந்த வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டாத வருமானம் ரூ.175 கோடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-05 04:52 GMT
சென்னை, 

மதுரையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரி துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கணக்கில் வராத வருமானம்

இதுகுறித்து வருமானவரி துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சிவில் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 18 வளாகங்களில் கடந்த 3-ந்தேதி வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஒப்பந்ததாரர் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, விற்று முதலில் 20 சதவீதத்திற்கும் அதிகமான ஈட்டப்பட்டுள்ளதாக உண்மையான கணக்கில் காட்டப்பட்டு உள்ளது. ஆனால் வருமானவரி துறைக்கு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே லாபம் ஈட்டப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

அதேபோல் நூறு துணை ஒப்பந்ததாரர்கள் மூலமாக சொத்துகளை வாங்குவதற்காக சட்டவிரோத பணபரிவர்த்தனையில் செலவு செய்ததாக கூறி உள்ளனர். இதேபோன்று பல்வேறு வழிமுறைகளில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.175 கோடி கணக்கில் வராத வருமானமும், அதற்கான ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத ரூ.3 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்