அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகல்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகியுள்ளார்.

Update: 2021-03-15 20:55 GMT
சென்னை, 

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனையும் அ.தி.மு.க.வினர் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.

இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுக்குழு

சசிகலா சிறையில் இருந்தபோது, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா, தினகரன் வழக்கு

இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர், மேற்படி பொதுக்குழுக்கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சிக்கு விரோதமான செயல்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என அதில் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனவே, பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள், குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

டி.டி.வி. தினகரன் விலகல்

பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

முன்னதாக, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சசிகலாவோடு சேர்ந்து தாக்கல் செய்த வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாக கடந்த 19.4.2019 அன்று டி.டி.வி.தினகரன் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில், மேற்படி வழக்கு நீதிபதி ரவி முன்னிலையில் நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்ெகாள்வதாக அறிவித்தார்.

இதன் மூலம் இந்த வழக்கில் இருந்து தினகரன் விலகியுள்ளார்.

விசாரணை தள்ளிவைப்பு

அதேநேரம் இந்த வழக்கில் சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பதில் மனு தொடர்பாக சசிகலாவிடம் இருந்து விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கேட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்