பொது சின்னம் கேட்டு சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 3 அரசியல் கட்சிகள் வழங்கும் விண்ணப்பத்தை இன்று மாலைக்குள் பரிசீலிக்க வேண்டும்

பொது சின்னம் கேட்டு சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 3 அரசியல் கட்சிகள் வழங்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து இன்று (புதன்கிழமை) மாலைக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-17 00:51 GMT
சென்னை, 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பொது சின்னம் ஒதுக்குவதற்கான தேதி முடிவடைந்து விட்டது' என்று கூறினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “பொது சின்னம் கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை முறையாக பரிசீலித்து 19-ந் தேதிக்குள் பொது சின்னம் ஒதுக்குவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ ரிக்‌ஷாவை மனுதாரர் கட்சியின் பொது சின்னமாக ஒதுக்க வேண்டும். அல்லது வேறொரு பொது சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

பரிசீலிக்க வேண்டும்

இதேபோல, தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் சுந்தரேசன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டன. இந்த 3 வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள் பொதுவான உத்தரவை பிறப்பித்தனர். அதில், “ஜனநாயக திருவிழாவில் பொதுமக்களின் வாக்குரிமை என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தேர்தலில் போட்டியிடும் உரிமை முக்கியமானது. எனவே, புதிய விண்ணப்பத்தையும் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டதால், அவர்களின் கோரிக்கைகள் முறையாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இருந்தாலும், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு பொது சின்னம் கேட்டு இன்று (நேற்று) மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை தேர்தல் ஆணையம் பரிசீலித்து இன்று (புதன்கிழமை) மாலைக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு 3 வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்