வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

தென்காசியில் பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டு வாட்ஸ்-அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Update: 2021-03-30 00:08 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் பணியாற்றி வருகிறார். இவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டு புகைப்படம் எடுக்கப்பட்டு வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் வெளியானது.

பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு கொடுத்தார்.

இதையடுத்து ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளை பணியிடை நீக்கம் செய்து அதன் நகலை வட்டார கல்வி அலுவலர் மூலம் அனுப்பி வைக்குமாறு பள்ளியின் தாளாளருக்கு மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா உத்தரவிட்டு உள்ளார்.

கலெக்டரிடம் புகார்

இதற்கிடையே, ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் சுரண்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். தற்போது தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளேன். கடந்த 26-ந் தேதி சங்கரன்கோவிலில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் எனது வாக்குச்சீட்டை வாங்காமல் வந்து விட்டேன். இதுவரை எனது வாக்குச்சீட்டு தபாலிலும் எனக்கு வரவில்லை.

நடவடிக்கை

ஆனால், அதன்பிறகு முகநூலில் எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரியாமலேயே யாரோ இதனை செய்து உள்ளனர். வாக்குச்சீட்டு பெற்றதற்காக நான் கையெழுத்து போடவில்லை. முகநூலில் வெளியிட்டவர் மீது விதிமுறைகளை மீறியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நிரபராதியான என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் வாக்குச்சீட்டு அளித்து ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்