தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-01 20:37 GMT
சென்னை, 

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு அது விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டது. தமிழகம் முழுவதும் உள்ள 1,900 அம்மா மினி கிளினிக்குகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டன. அதைத்தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் மையம் ஏற்படுத்தப்பட்டது.

8 வாரங்கள்

தமிழகத்தில் தற்போது அரசு தரப்பில் 6,097 தடுப்பூசி மையங்களும், தனியார் சார்பில் 1,916 தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான கால அளவை 4 வாரங்களில் இருந்து 8 வாரங்கள் வரை அதிகரிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அத்தகைய கால நீட்டிப்பை சூழலுக்கேற்ப செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்