அரசாங்கத்திடம் இருந்து பக்தர்கள் கைக்கு வர வேண்டும்: ‘‘கோவில்களை விடுவிப்பவர்களுக்கே எனது ஓட்டு’’; ஜக்கி வாசுதேவ் வீடியோ வெளியீடு

கோவில்களை விடுவிப்பவர்களுக்கே எனது ஓட்டு என்று ஜக்கி வாசுதேவ் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

Update: 2021-04-04 22:57 GMT

கோவில் அடிமை நிறுத்து இயக்கம் தொடக்கம்

தமிழக கோவில்களை அரசிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘‘கோவில் அடிமை நிறுத்து’’ என்ற இயக்கத்தை தொடங்கினார். இதற்காக, அழியும் நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களின் அவலநிலை குறித்த வீடியோக்களையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டார். அவரது கருத்துக்கு ஆதரவு பெருகியது.இந்த இயக்கத்துக்கு ஆதரவாக, மிஸ்டு கால்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் தங்களின் ஆதரவினை தெரிவித்திருந்தனர். இதைக் குறிப்பிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஜக்கிவாசுதேவ் கடிதம் எழுதி இருந்தார்.

ஆதரவு பெருகியது

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள கோவில்களை இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று டுவிட்டரில் இதற்கான ஆதரவு பெருகியது. ‘‘கோவில் அடிமை நிறுத்து’’ என்ற ஹாஷ்டேக்குகளை பலர் டிரெண்ட் செய்தனர். இது தேசிய அளவில் ரிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.இந்த நிலையில், ‘‘கோவில் அடிமை நிறுத்து’’ இயக்கம் டிரெண்டிங் ஆனது குறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

என் ஓட்டு யாருக்கு?

3 கோடி மக்கள் தங்களுக்கு நியாயப்படி சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர். நம் தமிழ் கோவில்களை காத்து, புனரமைப்போம். அரசியலமைப்பு சட்டப்படி என் உரிமையை எனக்கு மீட்டுக்கொடுத்து, கோவில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு.தமிழ் மண்ணில் பிறந்த அனைவரும் கோவில்களை விடுதலை செய்ய உறுதி ஏற்க வேண்டும். நம் கோவில்கள் அனைத்தும் உயிரோட்டமாகவும், மகத்தான கொண்டாட்டமாகவும், நம்முடைய ஆன்மீகத்திற்கும், முக்திக்கும் ஒரு வழியாக உருவாக்கிட வேண்டும்.

பக்தர்கள் கரங்களுக்கு வர வேண்டும்

கோவில்களை அரசு அருங்காட்சியகம் போல நடத்த முடியாது, கோவில்கள் உயிரோட்டமாக இருக்க வேண்டும். திராவிட பெருமையான இந்த தமிழ் கோவில்கள் திருப்பி முழுமையான, வைபவமான நிலைக்கு வர வேண்டும் என்றால், அவை அரசாங்கத்தின் கரங்களில் இருந்து பக்தர்களின் கரங்களுக்கு வர வேண்டும்.இதுகுறித்து 3 கோடி மக்கள் பேசியிருக்கிறார்கள். இப்பொழுதாவது அரசியல் கட்சிகள் யாராக இருந்தாலும் இதை கவனிக்க வேண்டும். மேலும், இதுகுறித்து ஒரு படி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்