காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் மரணம்; ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தலா? தேர்தல் கமிஷன் விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பதற்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2021-04-11 23:03 GMT
மாதவராவ்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் (வயது 63) போட்டியிட்டார்.கடந்த மாதம் (மார்ச்) 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த மாதவராவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து அவருக்கு மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய மகள் திவ்யா மாதவராவ் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.

மாதவராவ் மரணம்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாதவராவுக்கு, நுரையீரல் தொற்று பாதிப்பும் ஏற்பட்டது. எனவே அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.இந்தநிலையில் மாதவராவ் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 7.55 மணிக்கு மாதவராவ் பரிதாபமாக மரணம் அடைந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த சோகம் அடைந்தனர்.இறந்த வேட்பாளர் மாதவராவ், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி பிறந்தவர். மனைவி பெயர் சீதை. டாக்டரான இவர் இறந்து விட்டார்.இவர்களது ஒரே மகள் திவ்யா ராவ். மாதவராவ் தனது பள்ளிப்படிப்பை வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் 1972-ம் ஆண்டு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ. படித்தார். அதன் பிறகு சென்னை அரசு சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டப்படிப்பு முடித்தார். 2007-ம் ஆண்டு எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தார்.1986-ம் ஆண்டு ராஜீவ் பேரவை தலைவராகவும், 1990-ல் இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

வாய்ப்பு
1995-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சட்ட ஆலோசகர் பிரிவில் இணைச்செயலாளராக பதவி வகித்தார். 2010 வரை விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். அதன் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவர் இதற்கு முன்பு நடந்த பல சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சோகம்
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் மாதவராவ் போட்டியிடுவதற்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாகி மக்கள் பணி செய்யலாம் என்ற எண்ணத்துடன் தனது தேர்தல் பணியை தொடங்கினார்.ஆனால் தேர்தல் முடிவை அறியாமலேயே அவர் மரணம் அடைந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடல் அடக்கம்
மரணம் அடைந்த மாதவராவின் உடல் மதுரையில் இருந்து ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டது.அங்கு காதி போர்டு காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை அவரது உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இடைத்தேர்தல் நடத்தப்படுமா?
வாக்கு எண்ணிக்கையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் வெற்றி பெற்றிருந்தால் மீண்டும் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். அதேநேரத்தில் அவர் வெற்றிப் பெறவில்லை என்றால் தேர்தல் நடத்தப்படாது என்பது தேர்தல் நடைமுறையாகும்.மாதவராவை தவிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இ.எம்.மான்ராஜ், அ.ம.மு.க. சார்பில் சங்கீத பிரியா, மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவைய்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் பா.அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவராவ் மறைந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கேட்டதற்கு, ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்’’ என்று அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்