முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பேரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.1¾ கோடி மோசடி 3 பேர் கைது

முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பேரில் போலியான வங்கிக்கணக்கு தொடங்கி, ரூ.1¾ கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-16 00:28 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைகிறார்கள். இதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தை போலியான வங்கிக்கணக்கு தொடங்கி பெரிய அளவில் மோசடி நடப்பதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் உத்தரவிட்டார்.

இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்பேரில், திருவள்ளூரில் உள்ள ஒரு வங்கியில் போலி கணக்கு தொடங்கப்பட்டு, பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை கையாடல் செய்யப்பட்டிருந்தது.

ரூ.1.70 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டு இருந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், பூஞ்சோலை பூங்காநகரைச் சேர்ந்த குணசேகரன் (வயது 37), பொன்னேரி அருகே உள்ள தடா பெரும்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (31), துப்பிகுளம் தலவேடு பகுதியில் வசிக்கும் கமல்ஹாசன் (36) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் குணசேகரனிடம் இருந்து ரூ.8 லட்சம், 13 பவுன் நகைகள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்