நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு

நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-04-17 08:24 GMT
சென்னை, 

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர் உடலுக்கு இன்று மாலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இந்த சூழலில் நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி இருந்தது. 

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூக சேவையை கெளரவிக்க காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து, வரும் மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. அதுவரை மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்