வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் ஊரடங்கு அறிவிக்கலாம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் ஊரடங்கு அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

Update: 2021-04-26 12:01 GMT
கோப்புப்படம்
சென்னை, 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வேறு மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது, ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி  பற்றாக்குறை தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ரெம்டெசிவிர், தடுப்பூசி மருந்து. ஆக்சிஜன் இருப்பு விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. அதேபோல, புதுச்சேரியில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிய வழக்கிலும், இந்த விவரங்களை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ரெம்டெசிவிர், தடுப்பூசி மருந்து மற்றும் ஆக்சிஜன் இருப்பு நிலவரம் குறித்து தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின் போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள ஆக்சிஜனில், 35 மெட்ரிக் டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியும் என்ற போதும், மொத்த உற்பத்தி திறனான ஆயிரத்து 50 மெட்ரிக் டன் ஆக்சிஜனையும் திரவ ஆக்சிஜனாக மாற்ற கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்த தலைமை நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார துறை செயலாளர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு தனி மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு உரிய சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு மட்டும், 1,400 ரூபாய்க்கு ஒரு குப்பி விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ரெய்டுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு  அனுப்புவது குறித்து மாநில அரசுடன் கலந்து பேசி தான் முடிவெடுக்கப்பட்டதாகவும், தற்போது அரசு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசி மருந்துகளை, உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், 45 வயதுக்கு மேலானவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தொற்று சோதனை செய்து கொள்ளாமல் அரசு மருத்துவமனைகளில் குவிவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சேர்வது அவசியம் இல்லை என்றும், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, வெண்டிலேட்டர், படுக்கை, தடுப்பூசி சப்ளை பொருத்தவரை போதுமான அளவில் இருப்பதாக அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது எனவும் குறிப்பிட்டனர்.

ரெம்டெசிவர் மருந்து என்பது தினந்தோறும், அனைவரும் பயன்படுத்த வேண்டியதில்லை என்ற நீதிபதிகள்,  ரெம்டெசிவர் குறித்து விரிவான விளம்பரம் கொடுக்க தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு அறிவுறுத்தினர். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில், வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடக்கிறது. எண்ணிக்கை நடவடிக்கைகளின் போது, கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அதில் எந்த சமரசமும் செய்ய கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்தல் ஆணையம், இரு மாநில அரசுகளுடன் கலந்து பேசி உரிய நடைமுறைகள் பின்பற்றி, மேற்கொண்டு தொற்று எண்ணிக்கை அதிகமாகாமல் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் மற்றும் மே 2ம் தேதி அன்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்கலாம் எனவும், அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஏப்ரல் 28ல் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரைந்துள்ளனர்.  

வாக்கு எண்ணிக்கை தினத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனரர். தொடர் விழிப்புணர்வு வேண்டும். உடனடி முடிவுகள் எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இரு மாநிலங்களிலும் கொரோனா நிலவரங்கள் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்குகள் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு  ஒத்தி வைத்தனர். 

மேலும் செய்திகள்