கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்; மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்காக பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-27 22:18 GMT

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர், வக்கீல் காளிமுத்து மயிலவன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

ஊழியர்கள் பாதிப்பு

கொரோனா பரவலை தடுக்க 2020-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை. அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொருளாதார திட்டம்

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிசெய்யவில்லை. எனவே, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் விதமாக, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கு உயர்மட்டக் குழுவை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

பரிசீலிக்க வேண்டும்

பின்னர் நீதிபதிகள், மனுதாரர் கோருவதைப்போல, உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. அதேநேரம், இதுசம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனுவை அரசுக்கு அளித்துள்ளார். அந்த மனுவை மத்திய, மாநில அரசுகள் 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

மேலும் செய்திகள்