போலீசாருடன், வியாபாரிகள் வாக்குவாதம்

கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை மூட வலியுறுத்தியதால் போலீசாருக்கும் வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2021-04-28 16:15 GMT
புதுச்சேரி, ஏப்‌.29-
கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை மூட வலியுறுத்தியதால் போலீசாருக்கும் வியாபாரிகளுக்கும்   வாக்குவாதம் ஏற்பட்டது.
கட்டுப்பாடுகள் அமல்
புதுவையில்     தொற்று பரவலை     கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் உத்தரவையும் மீறி நேற்று ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே போலீசார் துணையுடன் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி அந்த கடைகளை உடனடியாக மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
ஒரேநேரத்தில் குவிந்தனர்
இதைத்தொடர்ந்து பெரும்பாலான கடைகள் அவசரம், அவசரமாக மூடப்பட்டன. சில வியாபாரிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை, அரசின் உத்தரவை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார்  எச்சரித்தனர். இதனால் அவர்களும் கடைகளை மூடிவிட்டு சென்றனர்.
இதற்கிடையே கடையடைப்பு காரணமாக பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் நேரு வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையொட்டி அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். ஒரேநேரத்தில் இதுபோல் பொதுமக்கள் திரண்டு வரக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரித்தனர்.
குடியிருப்புகளிலும் அறிவுறுத்தல்
நகர் பகுதியில் மட்டுமல்லாமல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள உப்பளம், பூமியான்பேட், வெங்கட்டாநகர், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, கருவடிக்குப்பம், உருவையாறு, முருங்கப்பாக்கம், வம்பாக்கீரப்பாளையம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் போலீசார் நேற்று வாகனங்களில் சென்று கடைகள் முன் திரண்டு இருந்தவர்களை எச்சரித்து கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் பல இடங்களில் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டு இருந்தன. சில இடங்களில் சிறிய அளவில் கதவை திறந்து வைத்து வியாபாரம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்