கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிரமங்களைக் குறைக்கும் வகையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிரமங்களைக் குறைத்து, வாழ்வாதாரத்திற்கு உதவும் விதமாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையை மக்களுக்கு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-05-07 20:13 GMT
சென்னை,

இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் திரும்பி உள்ள நிலையில், கட்டுப்பாடுகளும், மக்களின் துயரங்களும் தொடர்வதால், மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் முதல் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இயல்பு நிலை பாதிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலை கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டும்,

நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நோய்த் தொற்றின் காரணமாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாகவும் மக்களின் இயல்புநிலை வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்வாதாரங்களும் பாதிப்படைந்துள்ளன.

முதல் தவணை

தமிழகத்தில் தற்போது 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் ரூ.4,153.39 கோடி செலவில், அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை முதல் தவணையாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்