தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-17 06:39 GMT
Image courtesy : Representational Image
சென்னை: 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில்  974 பேரும், கர்நாடகாவில் 403 பேரும், தமிழகத்தில் 311 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 308 பேரும் உயிரிழந்தனர். டெல்லியில் 262 பேரும், பஞ்சாப்பில் 202 பேரும், உத்தரகாண்டில் 188 பேரும், ராஜஸ்தானில் 156 பேரும், மேற்கு வங்கத்தில் 147 பேரும், சத்தீஸ்காரில் 144 பேரும், அரியானாவில் 139 பேரும், ஆந்திராவில் 101 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 41 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 166 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 835 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 95 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 30 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 569 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தினசரி தொற்றின் காரணமாக 4வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மராட்டியத்திற்கு அடுத்ததாக 2ம் இடத்திற்கு சென்றுவிட்டது. கொரோனா 2ம் அலையில் சிக்கியவருக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் - வயது முதிர்ந்தவர்கள் வரை ஆக்சிஜன் படுக்கைகளை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,264 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,669 சிறுவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மிக எளிதாக குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவி விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது கண்டறியப்படும் நோய் தொற்றுகளில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு பிளஸ்டக் எனப்படும் குடும்ப தொற்று மூலமாகவே ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே மக்கள் பொதுவெளிகளை போலவே வீடுகளிலும் விழிப்புடன் செயல்பட்டு கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

மேலும் செய்திகள்