அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஊரடங்கு காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-05-30 19:12 GMT
கோப்புப்படம்
சென்னை, 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் நோய்த்தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என்று வரும் செய்திகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை குறையவேண்டுமென்றால் ஊரடங்கை நீட்டித்தால் தான் சாத்தியமாகும் என்று தமிழக அரசு தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது. தளர்வில்லா முழு ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையை வழங்கியுள்ளது.

அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் மற்றும் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன பழுது நீக்குவோர்கள் நடைபாதை வியாபாரிகள், சமையல் கலைஞர்கள், நரிக்குறவர்கள், சலவை தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், சிறிய கோவில் பூசாரிகள், திருநங்கைகள் போன்றோர்களுக்கு ரூ.5 ஆயிரம் அரசு உதவித் தொகையாக வழங்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான காய்கறி, பால் மற்றும் பருப்பு, எண்ணெய் போன்ற உணவு பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு ஊடரங்கு காலங்களில் மட்டும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்க கட்டணத்தை மத்திய அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படும் இந்த வேளையில் விலைவாசி உயராமல் இருப்பதற்கு இவை உதவிகரமாக இருக்கும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்