கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-06-04 16:20 GMT

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப்படாததால், அவர்களின் குடும்பங்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகளை பெற்றுத் தருவதற்கான ஆவணத்தை தயாரிப்பதில் காட்டப்படும் அலட்சியம் அல்லது தவறு கண்டிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்குதலின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் நேற்று வரை 25,665 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பத்தினரால் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டை பெற முடியவில்லை. எனவே, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை திருத்தி, கொரோனாவால் உயிரிழந்ததாக புதிய இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்