கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியீடு

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-08 16:31 GMT
கோப்புப்படம்
சென்னை, 

நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ரத்தத்தின் சர்க்கரை அளவை நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், கொரோனா சிகிச்சை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் உள்ள நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளும் கூட ஸ்டெராய்ட் எடுப்பதால் ரத்தத்தில் இருக்க கூடிய சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். அதனால் அவர்களது சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும். இரவு உணவுக்கு முன்பாகவும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.

சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ஸ்டெராய்ட் உடன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும். மூன்று வேளை உணவுக்கு முன்னதாக நிச்சயம் இன்சுலின் செலுத்த வேண்டும். சர்க்கரை அளவு 400க்கு கூடுதலாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும். கருப்பு பூஞ்சை நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஸ்டெராய்ட் எடுத்து கொள்பவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதற்கான சிகிச்சையுடன் இன்சுலினை சேர்த்து அளிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்