ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்வு நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவித்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-08 22:53 GMT
சென்னை,

நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆயிரம் கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன்மூலம், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-19 மற்றும் 2019-20 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் ஆயிரம் நலிந்த கலைஞர்கள் பயன் அடைவார்கள்.

ரூ.3 ஆயிரமாக உயர்வு

மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்து 600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், கலை பண்பாட்டுத்துறை ஆணையர் கலையரசி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் தேவா, உறுப்பினர் செயலாளர் தங்கவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்