சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபா

செங்கல்பட்டு மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டுள்ளார்.

Update: 2021-06-18 13:50 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், சிவசங்கர் பாபாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்