அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை நியமிக்க தடை கேட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு

அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை நியமிக்க தடை கேட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2021-07-19 21:22 GMT
சென்னை,

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்ற அ.தி.மு.க. தொண்டர் தாக்கல் செய்துள்ள வழக்கில், அ.தி.மு.க.வில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடைபெறவில்லை என்பதால், உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி தாமோதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

உரிமை இல்லை

அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கை தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி இன்றைய தேதியில் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை. அதனால் இந்த வழக்கை தொடர அவருக்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை. வேறு சிலரின் தனிப்பட்ட நலனுக்காக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. முகத்தைக் காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குகின்றனர். ஏற்கனவே சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன், தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என கூறி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சசிகலாவை நீக்கி பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக உட்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கால அவகாசம் பெறப்பட்டுள்ளது.

அபராதம்

இந்த வழக்கில் மனுதாரர் நிறைய தகவல்களை மறைத்துள்ளார். அவர் கட்சியின் உறுப்பினர்தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. ஒரே கோரிக்கைக்கு பல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே, இவரது வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்