ஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழக அரசின் கோப்புகளை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை அமைச்சர் தகவல்

ஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழக அரசின் கோப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2021-07-22 21:08 GMT
சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், தமிழ் வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சரவணன், தஞ்சாவூர் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன், மதுரை உலக தமிழ் சங்கத்தின் இயக்குநர் லலிதா, மொழிபெயர்ப்பு இயக்குநர் அருள், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநர் காமராசு, அரசு இணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ் ஆட்சிமொழி செயலாக்கம்

மாவட்டங்களில் இருக்கும் அரசு அலுவலக நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அங்குள்ள அலுவலர்கள் தமிழிலேயே கையெழுத்திடுதல், அரசாங்க கோப்புகளை தமிழிலேயே எழுதுவது போன்ற தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை உறுதிப்படுத்த இருக்கிறோம்.

இதுதொடர்பாக மாவட்ட அலுவலகங்களில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தகுந்த ஆணைகள் பிறப்பிக்கப்பட உள்ளன. அதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள இருக்கிறோம்.

தமிழில் அரசுக் கோப்புகள்

தமிழக அரசின் சில கோப்புகளில் ஆங்கிலத்தை தவிர்க்க முடியாமல் இருந்தாலும், அதற்கு இணையான மொழி பெயர்ப்புகள் தமிழிலே வர வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்கள் அனைவருக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். எனவே அதுகுறித்தும் இந்த ஆய்வில் ஆலோசிக்கப்பட்டது.

கோப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அதற்கான அலுவலர்களை நியமித்து அதை கண்காணிக்க முடிவு செய்திருக்கிறோம். இதற்காக தனி அலுவலர் நியமிக்கப்படுவார். தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.

கருணாநிதி பெயரில் விருது

கருணாநிதியின் பெயரில் செம்மொழி தமிழ் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டு தோறும் அவரின் பிறந்த நாளன்று ரூ.10 லட்சம் மற்றும் விருதுகளை இலக்கியம் மற்றும் கல்வெட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த விருது கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த விருதை வழங்குவதற்கான குழுவை முதல்-அமைச்சர் அமைத்திருக்கிறார். அந்த குழு அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு விரைவில் அளிக்கும்.

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. சமீபத்தில், அலங்கார வேலைப்பாடுகளுடன் 58 செ.மீ. விட்டம் கொண்ட உரை கிணறு ஒன்று கிடைத்து இருக்கிறது. கீழடி நமது நாகரிகத்தின் தொட்டில் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரிசையாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. கடைகள் உள்ளிட்டவற்றின் பெயர்ப் பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்