தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-23 18:12 GMT
சென்னை,

இதுகுறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநிலத்தில் தொழில்களை தொடங்குவது மற்றும் புதிய முயற்சி கொள்கை 2018-2023-க்கு அங்கீகாரம் அளித்து 2019-ம் ஆண்டு ஜனவரியில் அரசு ஆணை பிறப்பித்தது.

தொடக்கநிலையில் உள்ள பல தொழில் நிறுவனங்கள், ஆரம்பகட்டத்தில் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை மதிப்பு கிடைக்காததால் தடுமாறுகின்றன. பொருளாதார ரீதியாக அரசு மிகப்பெரிய கொள்முதல்தாரராக உள்ளது. எனவே அந்த பிரச்சினைகளுக்கு அரசால் தீர்வு அளிக்க முடியும்.

பிரச்சினைக்கு தீர்வு

அரசே கொள்முதல் செய்வது என்பது, அந்த தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கான அடையாளமாக இருக்கும். இதன் மூலம் அந்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆனால் தொழில் தொடங்கும் நிலையில் பல்வேறு இடையூறுகளை குறிப்பாக, இ.எம்.டி., முந்தைய விற்றுமுதல் நிலைப்பாடு, அனுபவங்கள் போன்றவை அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் விதிக்கும் தடைகளாக அமைந்துள்ளன.

விலக்குகள்

எனவே புதிய நிறுவனங்களுக்கான ஆரம்பகட்ட தடைகளை நீக்குவதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொழில் தொடக்கம் மற்றும் புதிய முயற்சிகள் இயக்கத்தில் (டான்சிம்) பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு அதற்கான இணையம் மூலம் உதவிகளையும், சலுகைகளையும் வழங்க அரசு முன்வந்துள்ளது.

அதன்படி, ரூ.20 லட்சத்துக்கும் குறைவான கொள்முதல் டெண்டர் தாக்கல் செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகளை அரசு அளிக்கும்.

அந்த நிறுவனங்களுக்கு, விற்றுமுதல் கட்டுப்பாடுகள், முந்தைய அனுபவ விவரங்கள் அளிப்பது மற்றும் முன்வைப்புத்தொகை என்ற இ.எம்.டி. டெபாசிட் செலுத்துவது ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டெண்டர் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்