கொற்கை அகழாய்வு பணி - சங்கு வளையல்கள், மோதிரங்கள் கண்டெடுப்பு

கொற்கை பகுதிகளில் சங்கி அறுக்கும் தொழிற்கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Update: 2021-07-27 10:50 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே உள்ள சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஏரல் அருகே உள்ள கொற்கையிலும் அகழாய்வு பணிகள் நடத்தப்படுகின்றன.

கொரோனா பரவல் அதிகரித்ததின் காரணமாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் முதல் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின. அங்கு தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களிலும் பள்ளங்களை தோண்டி, அகழாய்வு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. கொற்கையில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்புகள், சங்கால் செய்யப்பட்ட வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கை மற்றும் மாரமங்கலம் பகுதிகளில் 17 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சங்கு வளையல்கள் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கொற்கையில் சங்காலான 2 மோதிரங்களும், மாரமங்கலத்தில் 4 மோதிரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்த பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற்கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்