சாத்தான்குளம் இரட்டை கொலை விசாரணை: “என் கணவர், மகன் இறப்புக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” ஜெயராஜின் மனைவி பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

Update: 2021-08-05 04:05 GMT
மதுரை, 

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணையின்போது ஜெயராஜின் மனைவி செல்வராணி, மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, “என்னுடைய கணவர்-மகன் இறப்புக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கை 6 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு கெடு விதித்து உள்ளது. தற்போது அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இதனால் இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

இந்தநிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் உள்பட 9 போலீசார், சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி அரசு தரப்பு சாட்சியாக ஆஜரானார். பின்னர் அவர் சுமார் ஒரு மணி நேரம், நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த செல்வராணி நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகியோர் வீட்டில் இருந்து செல்லும் போது நல்ல உடல்நலத்துடன் இருந்தனர். ஆனால், அதன் பிறகு அவர்களை பிணமாகவே பார்க்க முடிந்தது. இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு எனது கணவர் பேசுகையில், “நடந்தது நடந்து விட்டது. நீ வீட்டில் இருக்க வேண்டாம். உன் சகோதரர் வீட்டுக்கு சென்றுவிடு” என்றார். எனது மகன் பேசும்போது, “போலீசார் எங்களை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்துவிட்டோம்” என்று தெரிவித்தார். நான் நேரில் சென்று பார்ப்பதற்குள் இருவரும் இறந்துவிட்டனர். அவர்களின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்