சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூ.3.79 கோடி அபராதம் வசூல்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் ரூ.3.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-08-17 00:46 GMT
சென்னை,

தமிழகத்தில், கொரோனா முதல் மற்றும் 2ம் அலை பாதிப்பு சென்னையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்தே, மற்ற மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியது.  இதனால், சென்னையில், தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

சென்னையில், நடப்பு ஆண்டு பிப்uவரி மாதம் கொரோனா இரண்டாவது அலை அதிகரிக்க துவங்கி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சம் தொட்டது.  அந்த மாதங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிட்டது. அதே போல், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் காணப்பட்டது.

இதனால், வருங்காலங்களில் 3வது அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ கட்டமைப்புகளை மாநகராட்சி வலுப்படுத்தி வருகிறது.  இந்நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள சூழலில் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவோர் மீதான நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.  பொதுமக்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில், 50 நபர்களுக்குள் பங்கேற்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை மீறி, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களை கண்காணிக்க, மண்டல அமலாக்க குழு கள ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர், ஏப்ரல் 9ம் தேதி முதல் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8,047 நிறுவனங்களிடம் இருந்தும், 46 ஆயிரத்து 755 நபர்களிடமிருந்தும், 3.79 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 925 கடைகள் மூடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்