தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீடிப்பது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகம் முழுவதும் 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2021-08-20 00:40 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருந்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து சென்றது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இன்று ஆலோசனை

அதைத்தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்டு 23-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 12-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20-ந்தேதி) காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தீவிர கட்டுப்பாடுகள்

தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மக்களை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கச் செய்வது தொடர்பாகவும், தொற்று பரவலின் 3-ம் அலை வராமல் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இன்று அறிவிப்பு?

அடுத்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்