ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பட்டம் வழங்கப்படும்

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பட்டம் வழங்கப்படும் சட்டசபையில் மசோதா அறிமுகம்.

Update: 2021-09-09 19:56 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவை கடந்த ஜனவரி 27-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அந்த அரசாணை யின்படி அவை அரசு மருத்துவ நிறுவனங்களாக கருதப்படுகின்றன.

தற்போது 2020-21-ம் கல்வி ஆண்டுவரை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகிய 3 கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மாணவராக தொடர்கிறவர்களுக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அல்லது பட்டயங்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கேற்ற வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்