தனியார் நிதி நிறுவன லாக்கரை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை

வில்லியனூர் அருகே தனியார் நிநி நிறுவனத்தில் இரும்பு லாக்கரை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-09-14 13:32 GMT
வில்லியனூர்
வில்லியனூர் அருகே தனியார் நிநி நிறுவனத்தில் இரும்பு லாக்கரை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிதி நிறுவனம்

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வசூல் செய்யப்படுகிறது.
இந்த நிதி நிறுவனத்தில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயபிரபா (வயது 34) மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் 8 பேர் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஜெயபிரபா விடுமுறையில் சென்றுவிட்டார். எனவே உதவி மேலாளர் சியாமளா நிதி நிறுவனத்தை கவனித்து வந்தார்.

பூட்டை உடைத்து கொள்ளை

கடந்த 9 மற்றும் 11-ந் தேதி ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் வசூலானதாகவும், அந்த பணத்தை வழக்கம்போல் அலுவலகத்தில் உள்ள இரும்பு லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சியாமளா சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் காலை சியாமளா மற்றும் துப்புரவு பணியாளர் சத்யா (30) ஆகியோர் நிதி நிறுவனத்துக்கு வந்தனர். அப்போது அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். 
மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கும் மாயமாகி இருந்தது. 

போலீஸ் விசாரணை

இந்த துணிகர கொள்ளை குறித்து மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தனியார் நிறுவனத்தை நோட்டமிட்ட மர்மநபர்கள், கடந்த 12-ந் தேதி நள்ளிரவு அலுவலக கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள், தங்களை பற்றிய அடையாளம் தெரியாமல் இருக்க கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச்சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கரிக்கலாம்பாக்கம் மெயின்ரோட்டில் தனியார் நிதி நிறுவனத்தில் இரும்பு லாக்கரில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்