ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்பட 12 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் வருமானவரித்துறை அதிரடி நடவடிக்கை

பணம் மதிப்பிழப்பின்போது நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களில் பெயர் இருந்தது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு உள்ளது.

Update: 2021-09-23 23:44 GMT
சென்னை,

கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள மத்திய அரசு காலஅவகாசமும் அளித்திருந்தது. அதேபோல் கருப்பு பணத்தை பதுக்கிய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் காட்டப்படாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மொத்தமாக வங்கியில் மாற்றிக்கொண்டனர். இவர்களுக்கு மத்திய அரசு புதிதாக அச்சிட்டு வெளியிட்டு இருந்த ரூ.2,000 புதிய நோட்டுகள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் சட்டத்திற்கு புறம்பாக ரூபாய் நோட்டுகளை மாற்றிய தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்

அந்தவகையில் சட்டவிரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. அதனடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக் குப்பதிவு செய்தனர். இதில் சி.பி.ஐ. பதிவு செய்த 3 வழக்குகளும் ஆதாரங்கள் இல்லை என கோர்ட்டால் முடித்து வைக்கப்பட்டன.

அவருடைய வீட்டில் நடந்த சோதனையின்போது கிடைத்த டைரியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் மற்றும் எம்.எல்.ஏ. ஒருவரின் பெயரும் இருந்துள்ளது.

வருமானவரித்துறை நோட்டீஸ்

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு இவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்