சென்னையில் பரபரப்பு சம்பவம் ரூ.3 கோடி கேட்டு தொழில் அதிபர் துப்பாக்கி முனையில் கடத்தல்

சென்னையில் ரூ.3 கோடி பணம் கேட்டு துப்பாக்கிமுனையில் தொழில் அதிபர் கடத்தப்பட்டார். அவரை பத்திரமாக மீட்ட போலீசார், ரவுடி உள்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2021-10-06 23:54 GMT
சென்னை,

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் மூசா (வயது 80). இவர் ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு பஷீர், செரீப் என்ற 2 மகன்கள் உள்ளனர். பஷீர் உத்தண்டி பகுதியில் வசிக்கிறார். செரீப் தந்தை மூசாவுடன் சேர்ந்து வாழ்கிறார். செம்மரக்கட்டை வியாபாரத்தில் தொழில் அதிபர் மூசாவுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன.

மூசா ஆரம்பகாலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு செம்மர வியாபாரத்தில் ஈடுபட்டார். போலீஸ் துறையில் வேலை பார்த்த அனுபவத்தில், தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை மூசா தைரியமாக சமாளித்துவந்தார்.

கையில் விலங்கு போட்டு கடத்தல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் மூசா தனது வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் திடீரென்று வீட்டுக்குள் புகுந்தது. துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி மூசாவை வீட்டிலிருந்து வெளியில் அழைத்துச்சென்றனர். பின்னர், தயாராக நின்ற காரில் மூசாவை கடத்திச்சென்றனர். கடத்தல்காரர்கள் மூசாவின் கைகளில் விலங்கு போட்டனர். அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் பிளாஸ்டர் ஒட்டினார்கள்.

தனது தந்தை கடத்திச்செல்லப்பட்டது குறித்து பஷீர் கானாத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். கானாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

செல்போனில் மிரட்டல்

போலீசார் தொழில் அதிபர் மூசாவை தேடிவந்த நிலையில், திங்கட்கிழமை மதியம் மூசாவின் மகன் செரீப்புக்கு செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். அந்த நபர், உனது தந்தையை கடத்தி வந்துள்ளோம், ரூ.3 கோடி கொடுத்தால் அவரை விடுவிப்போம், இல்லாவிட்டால் அவரை கொலை செய்து பிணத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்று மிரட்டினார். மேலும் போலீசுக்கு போனால் நிலைமை விபரீதமாகிவிடும் என்றும் அந்த மர்ம நபர் பயமுறுத்தினார்.

பின்னர் மீண்டும் போனில் பேசிய மர்ம ஆசாமி, மூசாவை விடுவிக்க பேரம் பேசினார். இறுதியில் ரூ.25 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று சம்மதம் தெரிவித்தார். கானாத்தூர் போலீசார் ஒருபுறம் விசாரித்து வந்தநிலையில், இன்னொருபுறம் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில், கீழப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மூசாவை பத்திரமாக மீட்க ரகசிய நடவடிக்கையில் இறங்கினார்கள்.

எழும்பூர் மியூசியம் அருகில்...

கடத்தல்காரர்கள், எழும்பூர் மியூசியம் அருகில் உள்ள பாலத்துக்கு கீழ் ரூ.25 லட்சம் பணத்துடன் வந்தால் தொழில் அதிபர் மூசாவை விட்டுவிடுவோம் என்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ரூ.25 லட்சம் பணம், ஒரு வாடகை காரில் வந்த கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனே தொழில் அதிபர் மூசாவை தங்கள் பிடியில் இருந்து கடத்தல்காரர்கள் விடுவித்தனர். மூசாவும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அடுத்த கணம், மாறுவேடத்தில் இருந்த போலீஸ் படையினர் கடத்தல்காரர்கள் வந்த வாடகை காரை முற்றுகையிட்டு மடக்கினார்கள். ஆனால் கடத்தல்காரர்கள் போலீசாரிடம் மாட்டாமல் தப்பிச்சென்றனர். கடத்தல்காரர்களின் காரை போலீசார் விரட்டிச்சென்றனர். போலீஸ் படையினர் பல கார்களில் பல முனைகளில் விரட்டிச்சென்று ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியில் வைத்து கடத்தல்காரர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது ஒரு போலீஸ் வாகனம் மீது கடத்தல்காரர்களின் கார் மோதியது. அதில் இருந்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

3 பேர் பிடிபட்டனர்

இந்த சம்பவம் சினிமா காட்சிபோல காணப்பட்டது. அங்குள்ள பொதுமக்கள் இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்தனர். கடத்தல்காரர்கள் காரில் இருந்த 2 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் பிடிபட்டனர். கடத்தல்காரர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டது. மேலும் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 2 கார்கள், ஒரு துப்பாக்கி மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட 3 பேரையும் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரவுடி அறுப்பு குமார்

இந்த கடத்தல் மற்றும் மீட்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விவரித்தார். அவர் கூறியதாவது:-

‘இந்த வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த குமார் என்ற அறுப்பு குமார் என்ற பிரபல ரவுடி கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர். இன்னொருவர், ரவுடி அறுப்பு குமாரின் கூட்டாளி பிரகாஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவதாக சங்கீதா என்ற பெண்ணும் பிடிபட்டவர்களில் ஒருவர். சங்கீதாவின் கணவர் காந்தி, போதை மறுவாழ்வு மையம் என்ற அமைப்பை போரூரில் நடத்திவருகிறார். கடத்தப்பட்ட தொழில் அதிபர் மூசாவை இந்த போதை மறுவாழ்வு மையத்தில்தான் அடைத்து வைத்துள்ளனர்.

காந்தி தப்பி ஓடிவிட்டார். அவர் பிடிபட்டவுடன், சங்கீதாவுக்கு இந்த வழக்கில் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என்பதை தெரிந்து அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடத்தலுக்கு காரணம்

தொழில் அதிபர் மூசா தனது செம்மர வியாபார தொழிலுக்கு ரவுடி அறுப்பு குமாரை பயன்படுத்திவந்துள்ளார். தொழிலில் வரும் லாபத்தில், மாதந்தோறும் ஒரு பெரிய தொகையை ரவுடி அறுப்பு குமாருக்கு மூசா கொடுத்துவந்ததாக தெரிகிறது. சமீபகாலமாக அந்த தொகையை சரிவர மூசா கொடுக்கவில்லை என்று அறுப்பு குமார் கூறுகிறார்.

அதனால்தான் மூசாவை கடத்தி தனக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்க திட்டமிட்டு, இந்த கடத்தலை அரங்கேற்றினோம் என்று ரவுடி அறுப்பு குமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி முழு விசாரணை நடந்துவருகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சாதாரண ஏர்கன் ரக துப்பாக்கிதான். இந்த வழக்கு தற்போது கானாத்தூர் போலீசாரால் விசாரிக்கப்படுகிறது. பின்னர் இந்த வழக்கு சேத்துப்பட்டு போலீசுக்கு மாற்றப்படும்.’

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்