ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: சென்னையில், 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்

ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளும் ஆர்வமுடன் பஸ்களில் புறப்பட்டு சென்றதால் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-10-13 22:17 GMT
சென்னை,

சென்னையில் கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்கு வசித்து வரும் வெளியூர்வாசிகள் பண்டிகை காலங்களின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாப்படுகிறது. அதைத்தொடர்ந்து விஜயதசமி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறுக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

சொந்த ஊர் பயணம்

பயணிகள் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பஸ் நிலையங்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்தும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில் விடிந்தால் பண்டிகை எனும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் நேற்று அதிக ஆர்வம் காட்டினர்.

இதனால் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

ரெயில் நிலையங்களில்...

பண்டிகை காலத்தையொட்டி, பயணிகள் தேவையை கருத்தில்கொண்டு தனியார் பஸ்கள் தங்கள் கட்டணத்தை நேற்று உயர்த்தியிருந்தன. இதனால் நேற்று தனியார் பஸ்களில் ரூ.100 முதல் ரூ.400 வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.

ரெயில் பயணத்தை பொறுத்தவரை தற்போது கொரோனா சூழல் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படுவதில்லை. இதனால் ரெயில் நிலையங்களில் நேற்று வழக்கமான கூட்டமே காணப்பட்டது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்கு வந்து சென்றனர்.

மேலும் செய்திகள்