ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை கடைக்கு சீல்

கோவை: அவிநாசி பகுதியில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-21 07:47 GMT
கோவை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவையில் பி.என்.பாளையம், அவிநாசி சாலையில் “ரோலிங் ட்ப் கேப்” எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக, 20-10-2021 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் புகார் பெறப்பட்டது.

கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கீழ்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

1. உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டது.

2. காலாவாதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

3. ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை.

4. உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது. முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை.

5. உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை.

6. உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை.

7. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டது.

8. உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் அந்த “ரோலிங் டப் கேப்” எனும் ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்